தமிழகத்தில் ரேஷன் கடைகள் வாயிலாக மக்கள் வீட்டு உபயோக பொருட்களை மலிவு விலையில் பெற்று வருகின்றனர். இதையடுத்து கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் 21 வகையான மளிகை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக பொருட்களை விநியோகத்தில் கால தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக ரேஷன் அடைத்தார்களுக்கு பொருட்களை வழங்குவதில் சிக்கலும் எழுந்தது. இதனிடையில் குறைவான ஊழியர்கள் அதிக பணிகளை மேற்கொண்டு வருவதால் அவர்களுக்கு பணி சுமை அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகுவதாகவும் கூறுகின்றனர். இந்நிலையில் ரேஷன் கடைகளிலுள்ள 3,803 காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பின் ரேஷன் கடைகளிலுள்ள காலிப்பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக நிரப்பப்பட இருப்பதாக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், தமிழகத்தில் 33,141 பகுதி நேர மற்றும் முழு நேர ரேஷன் கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடைகளில் காலியாகவுள்ள 3,176 விற்பனையாளர், 627 கட்டுநர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலமாக பணியாளர்களை தேர்ந்தெடுத்து காலி பணியிடங்களை நிரப்புவதற்கு தனியே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தங்களது பணிச்சுமையை குறைக்க ஒரு ரேஷன் கடைக்கு ஒரு விற்பனையாளர் ஒரு கட்டுநர் என்ற அடிப்படையில் ஆட்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.