தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக அரசுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி நிலையை சமாளிப்பதற்கு அரசு ஊழியர்கள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வினை அரசு நிறுத்தி வைத்தது. இதையடுத்து தற்போது நடைபெற்ற சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியில் உயர்வு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார். அதன்படி கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் அரசு ஊழியர்கள் தற்போது பெற்று வந்த 17 சதவீதம் அகவிலைப்படியில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
இதன் மூலம் பெரும்பாலான அரசு ஊழியர்கள் பயனடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அரசு ஊழியர்களில் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசுத் தொகையாக ரூ 3000 வழங்கப்பட்டது. ஓய்வூதியதாரர்களுக்கு ரூ500 முதல் ரூ2000 வரையிலும் பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த 14 சதவீதம் அகவிலைப்படி உயர்வு கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் வேலைப் பார்க்கும் ஊழியர்களுக்கும் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கும் பொருந்தும் என்று அரசு அறிவித்துள்ளது.
அதன்படி அரசு ஊழியர்களுக்கு அறிவித்த அகவிலைப்படியில் 14 சதவீதம் உயர்வு இவர்களுக்கும் வழங்கப்பட்டால் 28 சதவீதம் அகவிலைப்படி பெறுவார்கள். இது மற்ற அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில் 3 சதவீதம் வித்தியாச குறைவை பெற்றுள்ளது. அதனால் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் 31 சதவீதம் அகவிலைப்படியை கூட்டுறவு சங்க நியாய விலைக் கடைகளில் வேலைப் பார்க்கும் பணியாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. ஆகவே இந்த 3% வித்தியாச குறைவை நேர் செய்து 31% அகவிலைப்படி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.