தமிழகத்தில் கோடை காலம் நெருங்கிய நிலையில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெயிலின் தாக்கம் தாங்காமல் மக்கள் ஏசி, ஃபேன் உள்ளிட்ட மின்சாதன பொருட்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தின் மின்சார தேவை அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு அனைத்து மின் நிலையங்களிலும் அதிகளவு மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 5 யூனிட்டுகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் அதிக அளவு மின்சாரம் பயன்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். அதன்படி தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 17 ஆயிரத்து 370 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த மாதம் மார்ச் 27ஆம் தேதி அதிகபட்சமாக 17,196 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.