தமிழக அரசு விவசாயிகளுக்கு 5 லட்சம் மெட்ரிக் டன்னுக்கு மேல் உரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழக அரசு விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் அவர்களுக்கான கடன் உதவி, மானியம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளோடு சேர்த்து விவசாயத்துக்கு தேவைப்படும் உரம் விநியோகப்பது வரை தமிழக அரசானது கூடுதல் கவனத்தை செலுத்தி வருகிறது.
இந்நிலையில் கூட்டுறவுத்துறை மூலம் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு தேவையான யூரியா, டி.ஏ.பி, எம்.ஓ.பி மற்றும் காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட ரசாயன உரங்களை வினியோகம் செய்து வருகிறது.
இதையடுத்து 5 லட்சம் மெட்ரிக் டன்னுக்கு மேல் விவசாயிகளுக்கு உரம் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை தேவையான அளவில் மட்டும் அவர்கள் பெறும் பயிர்க்கடனில் ஒரு பகுதியாகவோ அல்லது ரொக்கமாக பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து விவசாயிகள் விரும்பும் உரங்களைத் தவிர வேறு உரங்கள் மற்றும் இடுபொருட்கள் வாங்க கட்டாயப்படுத்துகிற சங்க செயலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரிய சாமி எச்சரித்துள்ளார்.