தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தமிழகத்தில் வருகிற அக்டோபர் மாதம் முதல் அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்படும். இது ராபி பருவத்தில் 25.35 லட்சம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட இருக்கிறது. அதன் பிறகு 12.13 லட்சம் ஹெக்டேர் பரப்பில் நெல், தாளடி, சம்பா சாகுபடி செய்யப்படும். இது பிசான பருவத்தில் சாகுபடி செய்யப்படுவதால் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழையின் போது அதிக அளவில் மழை பெய்வதால் பயிர்களுக்கு பெருமளவு சேதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் பயிர் காப்பீடு என்பது மிகவும் முக்கியம். இதனையடுத்து கடந்த வருடம் 29 லட்சம் ஏக்கர் பர்ப்பில் 18.53 லட்சம் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை 481 கோடி ரூபாயை கொடுப்பதற்கு அக்டோபர் முதல் வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 40 லட்சம் ஏக்கர் பரப்பில் உள்ள பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கு 26 லட்சம் விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்கு கிராமங்கள் தோறும் உள்ள விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்து வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டார்.