அமைச்சர் சக்கரபாணி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் வாங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். அதாவது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்த அமைச்சர் சக்கரபாணி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்கொள்முதல் நிலையங்களில் தவறு எதுவும் நடக்கக் கூடாது என்பதற்காக நேரில் சென்று பார்வையிட்டார்.
மேலும் நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மூட்டை ஒன்றுக்கு ரூ.3.25 என வழங்கப்பட்டு வந்த ஊதியத்தை ரூ.10-ஆக உயர்த்தினார். பருவகால உதவுபவர்களுக்கும் காவலர்களுக்கும் தினப்படியாக ரூ.100, பருவகால பட்டியல் எழுத்தர்களுக்கு ரூ.120 வழங்க உத்தரவிட்டார். அதன்படி தற்போது ஊழியர்களுக்கு நெல் கொள்முதல் நிலையங்களில் ஊதியம் உயர்த்தி வழங்கப்படுகிறது.
அதோடு மட்டுமில்லாமல் தற்போது நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதால் தவறு எதுவும் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்” என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார். எனவே நெல் கொள்முதல் தொடர்பான புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்ணை ( 18005993540 ) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.