Categories
மாநில செய்திகள்

தமிழக +1 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய இடையூறுகளுக்கு மத்தியில் தமிழகத்தில் சென்ற கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் நேரடி முறையில் நடத்தப்பட்டது. இதையடுத்து கடந்த 2 வருடங்களாக இடை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பொதுத்தேர்வுகள் இந்த ஆண்டு வழக்கம்போல் நேரடி முறையில் நடத்தப்பட்டது. அந்த அடிப்படையில் கடந்த மேமாதம் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு ஜூன் மாதத்தில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இத்தேர்வு முடிவில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு வருகிற ஆகஸ்ட் மாதத்தில் துணைத்தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் சென்ற கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்கள் இன்று (ஜூலை 20) முதல் தங்களது விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இருப்பதாவது “தமிழகத்தில் சென்ற கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதி தேர்வு விடைத்தாள் நகலுக்காக விண்ணப்பித்தவர்கள் இன்று முதல் அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதன்படி மாணவர்கள் www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் வெளியிடப்படும் விடைத்தாள் நகலை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தற்போது விடைத்தாள் நகலை பெற்ற பிற்பாடு மறுகூட்டல் (அல்லது) மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், தேர்வுத் துறை இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். அந்த அடிப்படையில் இந்த விண்ணப்பத்தை நிரப்பி 2 நகல்களுடன் நாளை (ஜூலை 21) மதியம் 12 மணிமுதல் ஜூலை 25ஆம் தேதி 5 மணிவரை மாவட்ட அரசு தேர்வு உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்.

இதற்குரிய கட்டணமாக உயிரியல் பாடத்திற்கு ரூ.305-ம் , மற்ற பாடங்களுக்கு தலா ரூ.205-ம் செலுத்த வேண்டும். அதனை தொடர்ந்து மறு மதிப்பீட்டுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.505 கட்டணமாக செலுத்த வேண்டும். அதுமட்டுமின்றி தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் அந்தந்த மாவட்டத்திலுள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பத்தை ஒப்படைக்க வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |