தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தாக்கம் குறைந்து வந்ததை அடுத்து அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை ரத்து செய்தது. அதுமட்டுமல்லாமல் பள்ளிகளை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த 1ஆம் தேதி முதல் மீண்டும் தமிழகம் முழுவதும் 1 -12 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஒமிக்ரான் அச்சத்தால் ஒத்திவைக்கப்பட்ட திருப்புதல் தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டு கடந்த வாரம் 10, 12ம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்றது.
இந்த திருப்புதல் தேர்வில் பல முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தது. அதாவது, தனியார் பள்ளிகளில் இருந்து 10,12ஆம் வகுப்பு மாணவர்களின் திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்த்தது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் இது தொடர்பான விசாரனைகளும் நடைபெற்று வரும் நிலையில், இதற்கு மத்தியில் திருப்புதல் தேர்வானது முடிவடைந்துள்ளது. இதனிடையில் தினமும் தேர்வு முடிந்தவுடன் எஸ்.கே.பி பள்ளி சேகரிப்பு மையத்தில் விடைத்தாள் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின் சேகரிப்பு மையத்தில் இருந்து மதிப்பீட்டு பணிக்காக, ஒவ்வொரு பள்ளிக்கும் விடைத்தாள்கள் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த விடைத்தாள்கள் அனைத்தும் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தற்போது சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் மூலம் விடைத்தாள்களை திருத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையில் ஆசிரியர்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டதால் விடைத்தாள் திருத்தம் செய்ய ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டிலேயே விடைத்தாள்களை திருத்தம் செய்து வருகிற 21 ஆம் தேதி அவரவர் பள்ளியில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.