தமிழகம் முழுவதும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களை மூடி பக்தர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசானது பொதுமக்கள் கூட்டம் கூடாமல் இருக்கவும், கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இதனை தொடர்ந்து இதை கண்டித்து மாநிலம் முழுவதும் 12 முக்கிய இடங்களிலுள்ள கோவில்களின் அருகே பாஜகவானது ஆர்ப்பாட்டத்தை நேற்று நடத்தியது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் தலைமையில் சென்னை பாரிமுனையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் பின்னர் அவர் பேசியதாவது, “கோவில்களில் வழிபாட்டு உரிமைகளானது கொரோனாவை காரணம் காட்டி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் திரையரங்குகள் திறந்திருக்கும் நிலையில் கோவில்களை மட்டும் திறக்காதது ஏன்? தியேட்டரில் மட்டும் பரவாதா? எங்களது பூஜை அறைக்கும் கோவில்களுக்கும் திமுகவின் சித்தாந்தத்தை கொண்டுவர வேண்டாம். மேலும் மதத்தை காரணம் வைத்து அரசியல் செய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் 4 பிரிவின் கீழ் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி. செல்வம் உள்ளிட்ட 600 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்கையில் கடற்கரை காவல் நிலையத்தில் கொரோனாவின் பாதிப்புகள் குறைந்து வரும் சூழலில் விதிமுறைகளை மீறிய கூட்டம் கூடியதால் அவர்களின் மீது தொற்று நோய் தடுப்பு சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.