பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்கும் விதத்தில் அங்குள்ள கிராம மக்களுக்கு இலவசமாக கவசங்களை வழங்கி பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறார்.
தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதிக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர் அங்குள்ள சூழலை விரும்பி பல மாதமாக தங்கி செல்லும் நிலை இருந்து வருகிறது. இவ்வாறு தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களில் சிலர் அங்குள்ள மக்களின் உதவியோடு சிற்பம் மற்றும் ஆடை தயாரித்து ஏற்றுமதி செய்வது உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றார்கள். அந்த வகையில் விரானிக்கா என்ற பெண்மணி கடந்த 10 வருடங்களுக்கு மேல் வெண்புருஷம் என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் இங்கு தையல் பயிற்சி பெற்ற மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்து ஆடைகள் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார். இவர் இங்கு தயாரிக்கப்படும் ஆடைகளை வெளிநாடுகள் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்து இதன் மூலம் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் வேலை வாய்ப்பு பெறுமாறு செய்துள்ளார்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் தடுப்பு நடவடிக்கைகாக ஊரடங்கு உத்தரவால் விமானசேவை நிறுத்தப்பட்டிருப்பதால் ஏற்றுமதி தொழில் முடக்கப்பட்டுள்ளது. எனவே ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்த பெண்கள் தற்போது வேலைவாய்ப்பை இழந்திருக்கிறார்கள். இருந்தாலும் விரோனிக்கா நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட வைத்து முகக்கவசம் தயாரித்து மாமல்லபுரம் மற்றும் அதை சுற்றி இருக்கும் கிராம மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார். சென்ற ஏப்ரல் மாதம் முதல் இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகக்கவசங்களை இலவசமாக வழங்கி தொடர்ந்து முகக்கவசங்களை தயாரித்து உள்ளூர் மக்களுக்கு வழங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இப்பெண்ணின் சமூக சேவையை சமூக ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.