தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜர் மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகிய இருவரும் ட்விட்டரில் சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு மதுரை விமான நிலையத்தில் தமிழக நிதி அமைச்சர் கார் மீது காலணி வீசிய சம்பவத்தின் தொடர்ச்சியாக இந்த மோதல் தொடங்கியுள்ளது.
நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அந்த ஆண்டின் பெயரைக் கூட நான் குறிப்பிட விரும்பவில்லை. தீவிரவாத தாக்குதலில் உயிர் நீத்த தியாகியின் உடலை வைத்து விளம்பரம் தேடுவது தேசியக்கொடி பொருத்தப்பட்டுள்ள கார் மீது காலணி வீச ஏற்பாடு செய்வது, அவதூறு பரப்புவது மற்றும் அப்பட்டமாக பொய் சொல்வது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடும் நபர் தமிழ் சமூகத்தின் சாவக்கேடு என்று குறிப்பிட்டு அண்ணாமலை விமான நிலைய அஞ்சலியில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படத்தையும் காலனி வீசியது தொடர்புடைய சில செய்தித்தாள் படங்களையும் பதிவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அடுத்த சில நிமிடத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள twitter பதிவில், மிஸ்டர் பி டி ஆர் முன்னோர்களின் இன்சியலை பயன்படுத்தி மட்டுமே வாழும் உங்களுக்கும் உங்கள் கூட்டாளி போன்றவர்களுக்கு பெருமையுடன் விவசாயம் செய்யும் ஒரு விவசாயியின் மகன் சுயமாக வளர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
பெரிய பரம்பரையில் பிறந்ததை தவிர இந்த ஜென்மத்தில் நீங்கள் என்ன பயன் உள்ளதை செய்து இருக்கிறீர்கள், நீங்கள் தான் இந்த ஜென்மத்தில் அரசியலுக்கும் எங்கள் மாநிலத்திற்கும் சாபக்கேடு.பெரிய விமானங்களில் பயணம் செய்யாமல் வாழ்க்கை நடத்தும் எங்களை போன்றவர்களும் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் நீங்கள் என் காலணிகளுக்கு கூட நிகரில்லை. அதுபோன்ற ஒன்றைத் திட்டமிட உங்கள் நிலைக்கு நான் ஒருபோதும் இறங்க மாட்டேன். கவலைப்படாதீர்கள் என்று காட்டமாக பதில் அளித்துள்ளார்.