இந்தியாவில் சமீப காலமாகவே பல்வேறு பகுதிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு மற்றும் சமஸ்கிருதத்தை முன்னிலைப்படுத்துவது போன்ற பல்வேறு விதமான சம்பவங்கள் அரசு விழாக்களில் நடந்து பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் மீண்டும் அப்படி ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. அதாவது புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிகள் சர்வதேச பொது சுகாதார பள்ளி திறப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மண்டேவியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஜிப்மர் மருத்துவமனை பொது பள்ளியை திறந்து வைத்தார். இந்நிலையில் விழா தொடங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக சமஸ்கிருத பாடல் ஒலிபரப்பப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த முதலமைச்சரும், ஆளுநரும் மருத்துவமனை நிர்வாகத்திடம் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்படாதது ஏன் என கேட்டுள்ளனர். இதற்கு உரிய காரணத்தை அளிக்காததால் முதல்வர் நிகழ்ச்சியை புறக்கணித்து விட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார். இதனையடுத்து விழாவின் பாதியில் திடீரென தமிழ்த்தாய் வாழ்த்து பாடப் பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.