திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் காணொளி பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக.ஸ்டாலின், ஜனவரி 26-ஆம் நாள் குடியரசு தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இந்திய நாட்டு மிக முக்கியமான இரண்டு நாட்கள்….. 1.ஆகஸ்ட் 15 சுதந்திர நாள் மற்றொன்று ஜனவரி 26 குடியரசு நாள்.
அந்த குடியரசு நாளில் டெல்லியில் நடைபெறக்கூடிய அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் இந்த ஆண்டு தமிழ்நாட்டின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட வாகனங்களுக்கு திட்டமிட்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.அதற்கு அவர்கள் சொன்ன காரணம் என்ன ? அவர்கள் சொன்ன காரணம் ஏற்றுக்கொள்ள முடியுமா ? முடியாது. வீரமங்கை வேலு நாச்சியாரை, மானங்காத்த மருது பாண்டியரை, மகாகவி பாரதியாரை,
கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனார் யார் என்று கேட்பதற்கு இவர்கள் யார் ? பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக முதல் குரல் எழுப்பிய மண் தென்னாடு. அதிலும் குறிப்பாக தமிழ்நாடு. அவர்கள் சொல்லும் சிப்பாய் கலகத்திற்கு 50 ஆண்டுகளுக்கு முன்னதாக 1806ஆம் ஆண்டு வேலூரில் புரட்சி நடந்திருக்கிறது. அதற்கு முன்னால் நெற்கட்டுசேவலில் புலித்தேவன், சிவகங்கையில் வேலுநாச்சியார், பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், இராமநாதபுரத்தில் மைலப்பன், கான்சாகிப் மருதநாயகம், தளபதி சுந்தரலிங்கம்,
தீரன் சின்னமலை, சிவகியிலே மாப்பிள்ளை வெள்ளையன், அழகுமுத்துக்கோன், பழனியில் கோபால் நாயக்கர் இப்படி பலரும் போராடிய மண் இந்த தமிழ்நாடு. வேலு நாச்சியார் யார் ? கட்டபொம்மன், மருது பாண்டியர் யார் ? வ.உ சிதம்பரம் யார் ? என்று கேட்பவர்களே… நீங்கள் முதலில் பிரிட்டிஷ் அதிகாரிகள் எழுதி இருக்கக்கூடிய வரலாறுகளை எடுத்துப் படித்துப் பாருங்கள்.
பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக பிரகடனம் எழுதி கோவில் சுவரிலே ஒட்டி வைத்த மாவீரன் மருதுபாண்டியன், பேரசர்களுக்கு பணியாளர்களும், இழிபிறப்பான பரங்கியருக்கு வழங்கியதற்கு பரம எதிரியான மருதுபாண்டியர் என்று கையெழுத்து போட்டு வைத்தவன் மருதுபாண்டியன். வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கு மேடைக்கு சென்றபோது அஞ்சா நெஞ்சத்தோடு சென்றதாகவும், தன்னை காட்டிக் கொடுத்தவர்கள் பார்த்து சிரித்ததாகவும்,
போரில் இறந்து இருந்தால் நன்றாக இருக்கும் சொன்னதாகவும் பிரிட்டிஷ் அதிகாரி பானர் மேனன் எழுதி காட்டியிருக்கிறார். சிதம்பரனாரின் பேச்சை கேட்டால் பிணம் கூட எழுந்து நிற்கும் என்று பிரிட்டிஷ் அதிகாரிகள் எழுதி வைத்திருக்கிறார்கள். இவர் சாதாரண ஆள் அல்ல, பயங்கரமானவர் என்று இரட்டை ஆயுள் தண்டனை வழங்கிய நீதிபதி எழுதிவைத்திருக்கிறார்.
அத்தகைய சிதம்பரணாரை கப்பலோட்டிய தொழிலதிபர் தானே என்று ஒரு டில்லி அதிகாரி கேட்டதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.யாருக்கு எதிராக கப்பல் ஓட்டினார் ? பிரிட்டிஷாருக்கு எதிராக தானே… அரசியல்வாதியாக மட்டுமல்ல, பொருளாதார ரீதியாக பிரிட்டிஷ் அரசை பலவீனப்படுத்த முயன்ற முதல் சுதேசி அல்லவா சிதம்பரனார். இந்த புரிதல் கூட இல்லாதவர்கள், தமிழ்நாட்டை, தமிழை, தமிழர்களின் உணர்வை எப்படி புரிந்து கொள்வார்கள் ? என தெரிவித்தார்.