தமிழக அரசு சார்பாக இயங்கி வரும் போக்குவரத்து துறையில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு குறித்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பல வருடங்களாக வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரசு போக்குவரத்து பணியாளர்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அக்கட்சிக்கு தொடர்புடைய சங்கத்திற்கு போக்குவரத்து தொழிலாளர்கள் சந்தா செலுத்தி உறுப்பினராக வேண்டும் என்று கூறிய அவர், இல்லையெனில் பேருந்தை விட்டு வேறு வழி தடத்திற்கு மாற்றுவது, வேறு பணிமனைக்கு இட மாற்றம் செய்வது ஆகிய பழிவாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆகவே இதில் தமிழ்நாடு அரசு தலையிட்டு எழுத்து மூலமாக கருத்து கேட்பு நடத்தி அவர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.