சென்னை எழும்பூரில், முதல்வர் மு.க ஸ்டாலின் பாரம்பரியமிக்க பழைய காவல் ஆணையரக கட்டிடத்தை 6 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு காவல் அருங்காட்சியமாக மாற்றி அமைத்து பொதுமக்களின் பார்வைக்காக நேற்று திறந்து வைத்தார். தமிழ்நாடு காவல் அருங்காட்சியம் ஆனது 24,000 சதுர அடி பரப்பளவில் இரண்டு தலங்களாக காவல்துறையினர் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் தரை தளத்திலும், வாத்திய இசைக் கருவிகள், காவல் துறையின் சாதனைகள், காவல்துறையால் மீட்டெடுக்கப்பட்ட சிலைகள், கள்ள நோட்டுகள், அச்சடிக்கும் இயந்திரம், வெடிகுண்டுகள், குண்டுகளை கண்டுபிடிக்க பயன்படும் கருவிகள், மாதிரி சிறைச்சாலை, போன்றவை முதல் தளத்திலும் வைக்கப்பட்டிருக்கிறது.
மேலும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட மற்றும் பயன்படுத்தி வரும் தோட்டாக்கள் வால்கள், மற்றும் துப்பாக்கிகள் போன்றவற்றை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. அதன் பின்னர் காவல்துறையில் மிகச் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள்,முதல் உயர் அதிகாரிகள் வரை கொடுக்கப்பட்டு வரும் மாதிரி பதக்கங்களையும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
அதனை எடுத்து இதில் முக்கியமான வரலாற்று ஆவணங்கள் காவல் துறை தொடர்பான அந்த காலத்தில் செயல்படுத்தப்பட்ட முக்கிய அறிவிப்புகள், ஆங்கிலேயர் காலத்தில் காவல்துறையினர் பயன்படுத்தியுள்ள ஆயுதங்கள், ஆரம்பகாலங்களில் தமிழக காவல்துறையினர் பயன்படுத்திய சீருடைகள், பெல்ட், மோப்ப நாய்களின் புகைப்படங்கள், வரலாற்று சிறப்புமிக்க செய்தி தொகுப்புகள் காவல் ஆணையாளர் அலுவலக அறையில் உள்ள அரிய பழமையான பொருட்கள், அணிவகுப்பு சின்னங்கள், கம்பியில்லா தொலைத் தொடர்பு கருவிகள், காவல்துறை சேவை பதக்கங்கள், கலைப் பொருட்கள், போன்றவற்றையும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
மேலும் கண்காணிப்பு கேமரா, தீ தடுப்பு சாதனங்கள், குடிநீர் வசதி,மழைநீர் சேகரிப்பு வசதி, சிற்றுண்டியகம், நுழைவுச் சீட்டு வழங்கும் இடம்,போன்ற பல்வேறு கட்டமைப்பு வசதிகளும் இந்த அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதல் வசதிகளாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தை பார்வையிட வந்த பள்ளி மாணவ,மாணவிகளிடம் முதல்வர் சிறப்புரையாற்றி இனிப்புகளை வழங்கினார். அருங்காட்சியகத்தை பார்க்க வரும் அரசு பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், அனைவருக்கும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை கட்டணங்கள் கிடையாது. மேலும் அக்டோபர் 1ம் தேதி முதல் அருங்காட்சியகத்தை பார்வையிட வரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.