தமிழ்நாடு சட்டப்சபையிலிருந்து நேற்று வெளிநடப்பு செய்த சூழ்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் பேசியதாவது, “திமுக அரசு பொறுப்பேற்ற 10 மாதம் காலத்தில் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. மக்கள்விரோத ஆட்சி இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக சொத்துவரியை 600 சதுரடிக்கு 25,50,75 பின் 150 சதவீதம் என பொதுமக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் அளவுக்கு கடுமையாக அதிகரித்து இருப்பது கண்டனத்திற்குரியதாகும். மக்கள் மீது திமுக அரசு பெரிய சுமையைச் சுமத்துகிறது. உடனே அதிகரிக்கப்பட்ட சொத்து வரியைத் திரும்பப் பெற வேண்டும் என்று அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்தோம். இருந்தாலும் மத்திய அரசானது சொத்துவரியை அதிகரிக்கவேண்டும் என குறிப்பிட்டு உள்ளது. இதனால் நாங்கள் அதிகரித்தோம் என்று ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார்.
வெளிநடப்பு செய்தது எதற்காக…?
மத்திய அரசு சொத்துவரிக்கான குறைந்தபட்ச அளவினை ஒவ்வொரு மாநிலமும் அறிவிக்கும் என எதிர்பார்ப்பதாகவும், வரி வசூலிப்பதற்கான பொருத்தமான செயல்பாட்டுடன் கூடிய ஏற்பாடுகளையும் மேற்கொள்ளவேண்டும் என்றுதான் கூறியுள்ளது. எந்த இடத்திலும் சொத்துவரி அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு குறிப்பிடவில்லை. எனினும் ஆட்சிக்கு வந்த 10 மாத காலத்தில் அதுவும் உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை காத்திருந்து வாக்களித்த மக்களுக்குப் பரிசாகச் சொத்துவரியை அதிகரித்துள்ளார்கள். மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ள நிலையை உணர்ந்து அதிகரிக்கப்பட சொத்து வரியைத் திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தி வெளிநடப்பு செய்திருக்கின்றோம். ஆகவே நாங்கள் வைத்த கோரிக்கையை முதல்வர் ஏற்காததால் வெளிநடப்பு செய்துள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.