தமிழ்நாடு நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் கடந்த இரு நாட்களாக டெல்லியில் முகாமிட்டு உள்ளார். அங்கு மத்திய நீர்பாசனத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து, மேகதாது அணை கட்ட அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி வருகிறார். மேலும், காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசை வலியுறுத்துமாறும் கூறியுள்ளார். இதற்கிடையில், தமிழ்நாட்டில் 4 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ள மாநில பாஜக, டெல்லியில் முகாமிட்டு, பிரதமர், மத்தியஅமைச்சர்கள், பாஜக தலைவர்களை சந்தித்து வருகின்றனர்.
இரு தரப்பினரும் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ளனர். இன்று இருதரப்பினரும் யதேச்சையாக சந்தித்து கொண்டனர். அப்போது ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக்கொண்டு சிரித்து மகிழ்ந்தனர். இதை கண்ட செய்தியாளர் ஒருவர், தமிழ்நாட்டில் இரு கட்சியினரும் வேறு வேறு உள்ளீர்களே, இங்கு சந்தித்துக் கொள்கிரீர்களே என்று கேள்வி எழுப்பினார். அதற்கு தனது பாணியில் பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன் தமிழ்நாடு தாண்டினால் அனைவரும் ஒன்றுதான் என சிரித்தபடியே பதில் கூறினார்.