தர்மபுரியில் பாமக சார்பில் மாவட்ட வளர்ச்சிக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே. மணி கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுடன் கட்சியின் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் ஜி.கே. மணி செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. விவசாய நீர்ப்பாசன நிதி ஒதுக்கீடு, பெண்களுக்கான பாதுகாப்பு சமூக பாதுகாப்பு திட்டங்கள், கல்விக்கு முன்னுரிமை ஆகிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. சட்டமன்றத்தில் துறைவாரியான மானியக் கோரிக்கை விவாதத்தில் புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகும்.
மேலும், வேலைவாய்ப்பின்மையை போக்க தொழில் வளர்ச்சி வேண்டும். தர்மபுரியில் மூடப்பட்ட மதுபானக் கடைகளை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா கூறியதுபோல் படிப்படியாக மூட வேண்டும். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் சென்று சேராத கிராமப்புறங்களுக்கு அத்திட்டம் முழுமையாக சென்றடைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.