Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை – தமிழ்நாடு சுகாதாரத் துறை அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என உறுதியாகியுள்ளதால் பொதுமக்கள் யாரும் இது தொடர்பாக அச்சம் கொள்ளத் தேவையில்லை என தமிழ்நாடு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘உலக சுகாதார நிறுவனத்தால் கொரோனா வைரஸ் தொடர்பாக அனைத்து நாடுகளும் எடுக்க வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, உலக நாடுகள் வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கின. அதன் அடிப்படையில் இந்திய அரசாங்கம் சார்பில் முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

குறிப்பாக தமிழ்நாட்டை பொறுத்தவரை அதற்கான முழு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்பாக கண்டறிவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கிறது. விமான பயணிகள், குறிப்பாக சீனா, ஹாங்காங், தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு முதல்கட்டமாக முழுமையான தெர்மல் அடிப்படையிலான ஆய்வுகள் செய்யப்பட்டுவருகின்றன.

இந்தியா முழுவதுமுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் இதுபோன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை தொடர்ந்து, தமிழ்நாட்டில் இதுவரை 21 ஆயிரத்து 312 விமான பயணிகளிடம் சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு மையங்கள் அமைத்து அவற்றின் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

No coronavirus infection in Tamil Nadu Health Department announces

இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் அடிப்படையில் 1,738 விமான பயணிகள் கொரோனா பாதிப்பு இருக்கலாம் என கண்டறியப்பட்டு அவர்களுக்கான சிறப்பு சிகிச்சைகள் தனி அறைகளில் 28 நாட்களாக வழங்கப்பட்டு வருகிறது. இதில் அதன் பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளதாக கருதப்படும் 5 பயணிகள் சிறப்பு வார்டுகள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

தொடர்ந்து 42 பயணிகளிடம் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டிலும், பூனாவில் உள்ள ஆய்வகம் ஒன்றிலும் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் 36 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஆறு பயணிகளின் ரத்த மாதிரிகள் சோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். சம்பந்தப்பட்ட 6 பயணிகளுக்கும் உடல்நலத்தில் எந்த பாதிப்பும் இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

எனவே தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ள நிலையில் பொதுமக்கள் யாரும் இது தொடர்பாக அச்சம் கொள்ளத் தேவையில்லை. அதே சமயம் பாதுகாப்பான கைக்குட்டைகள் மற்றும் இருமல் வரும்போது பொதுவெளியில் துப்புவது போன்ற விஷயங்களில் எல்லாம் தமிழ்நாடு மாநில சுகாதாரத் துறை கொடுத்த அறிவுரையின்படி நடந்துகொள்ள வேண்டும். மேலும் அவ்வாறு பாதிப்புகள் ஏற்படும் நபர்கள் 28 நாட்களுக்கு சிறப்பு வார்டுகளில் வைத்து கண்காணிக்கப்படுவார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |