விசாரணை என்ற பெயரில் வனத்துறையினரால் விவசாயி உயிர் பறிப்பு – காவல்துறை மறைக்க முயற்சி என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா, சட்டத்தை ஆளாளுக்கு கையில் எடுத்துக்கொண்டு ஆட்டம் போடும் அவலம் நடக்கிறதா என்ற சந்தேகமும், அச்சமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவலர்களின் கொடூரமான தாக்குதலால் தந்தை – மகன் இருவரது உயிரும் பறிக்கப்பட்ட கொடூர நிகழ்வின் ரத்தச் சுவடுகள் காயாத நிலையில், தென்காசி மாவட்டம் கடையம் அருகே வனத்துறையினரால் மற்றொரு உயிர், கொடூரமாகப் பறிக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சிச் செய்தி அனைவரையும் தாக்கியுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையம் வட்டம், வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 56 வயது அணைக்கரை முத்து என்பவர் தனது வயலைப் பன்றிகள் சேதப்படுத்துவதால், அனுமதியின்றி மின்வேலி அமைத்திருந்தது தொடர்பாக ஜூலை 22-ம் தேதி இரவு 11 மணி அளவில் கடையம் சரக வன அதிகாரி நெல்லை நாயகமும், அவருடன் வனத்துறையினரும் வந்து விசாரணைக்காக அழைத்துள்ளனனர். இரவு நேரத்தில், சட்டை கூட அணிவதற்கு அவகாசம் தரப்படாமல், அணைக்கரை முத்து, விசாரணைக்காகக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.
அதன்பின் நள்ளிரவு 12.30 மணியளவில் முத்துவின் மூத்த மகன் நடராஜன் அவர்களுக்கு வனத்துறையினர் போன்கால் செய்து, அவருடைய அப்பாவின் சட்டை ஒன்றை எடுத்து வரச் செய்துள்ளனர். நடராஜனும் அவருடைய மைத்துனரும் சட்டையை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சிவசைலத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்குச் செல்லும்போது, எதிரே வனத்துறையினரின் வாகனம் வந்துள்ளது. அதில், தனது அப்பா பேச்சு மூச்சு இல்லாமல் கிடப்பதைப் பார்த்து நடராஜன் பதறி, விசாரித்துள்ளார்.
கடையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வனத்துறையினர் சென்றபோது, அணைக்கரை முத்துவைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டார் என்கிற அதிர்ச்சி செய்தியைத் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு, தென்காசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அங்கும் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.
அணைக்கரை முத்துவை விசாரணை என்ற பெயரில் நள்ளிரவில் அழைத்துச் சென்ற வனத்துறையினரே அவரது உயிர் பறிக்கப்பட்டதற்குக் காரணம் என ஜூலை 23 அன்று ஆழ்வார்குறிச்சி காவல் நிலையம் முன் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கிய தகவல் அறிந்த ஆலங்குளம் தொகுதி தி.மு.கழக சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா உடடினயாக அங்கே சென்று, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் துணை நின்று, உயிர்பறிப்புக்கு காரணமான வனத்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
வனத்துறையினர் ‘கஸ்டடியில்’ இருந்தபோது உயிரிழந்த அணைக்கரை முத்துவின் உடல், அவரது குடும்பத்தினர் முன்னிலையில் பகல் நேரத்தில் உடல்கூராய்வு செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்ட நிலையில், இரவோடு இரவாக உடல்கூராய்வு நடத்தப்பட்டுள்ளது. அணைக்கரை முத்துவின் உடல்களில் காயங்கள் இருப்பதை அவரது குடும்பத்தினர் சுட்டிக்காட்டுகின்றனர். இவை அனைத்துமே சந்தேகங்களை வலுப்படுத்தக் கூடியதாக இருக்கின்றன.
உயிர் பறிக்கப்பட்ட அணைக்கரை முத்து குடும்பத்தாருக்குத் தமிழக அரசின் சார்பில் இழப்பீட்டு நிதி அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம், வனத்துறையினரின் அத்துமீறலையும், அதற்கேற்ப காவல்துறை செயல்பட்டிருப்பதையும், மறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
இந்தக் கொடூர உயிர்பறிப்பு குறித்து மாநில மனித உரிமை ஆணையத்திற்குக் கழக சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா அவர்கள் புகார்க் கடிதம் அளித்திருப்பதுடன், வாகைக்குளம் அணைக்கரை முத்து உயிரிழப்புக்குக் காரணமான வனத்துறையைச் சேர்ந்த ரேஞ்சர் நெல்லை நாயகம், பசுங்கிளி, முருகசாமி, சக்தி முருகன், மனோஜ், மணிகண்டன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
விசாரணை என்ற பெயரில் சட்டத்திற்குப் புறம்பாக – நேரம் கடந்தும் – சட்டைகூட அணிய அவகாசம் தராமலும் மனித உரிமைகளை மீறி அழைத்துச் செல்லப்பட்டு உயிர் பறிக்கப்பட்ட அணைக்கரை முத்து அவர்களின் குடும்பத்தாருக்கு உரிய நீதி கிடைத்திட வேண்டும் எனத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன். நீதிக்கான சட்டப்போரட்டத்தில் தி.மு.கழகம் துணை நிற்கும்.
https://www.facebook.com/arivalayam/posts/3376698349027626