திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ரூ.80 லட்சம் செலவில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா 3-வது அலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்ததும், 3-வது அலையை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா நோயாளிகள் யாரும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்துவிடக்கூடாது என்பதற்காக ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தார். அதன் பலனாக தமிழகத்தில் இதுவரை 222 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தி.மு.க. ஆட்சியில் 4 மாதங்களில் 5 கோடியே 3 லட்சம் பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதற்காக தமிழகத்தில் 5 முறை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. தமிழகத்தில் நேற்று மாலை வரை 64 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை 331 பேர் மட்டுமே டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர் என்று அவர் கூறிஉள்ளார்.