தமிழகத்தில் 6 முதல் 12 வயது சிறுவர்களுக்கு எப்போது தடுப்பூசி செலுத்தப்படும் என்பது தொடர்பாக அமைச்சர் சுப்பிரமணியன் விளக்கம் கொடுத்துள்ளார்.
சென்னை மடுவங்கரையில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் 51.94 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சூரியசக்தி உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் மற்றும் பயிற்சி மைய அறையை நேற்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது” சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 22 பள்ளிகளில் ஹைடெக் லேப் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் விளையாட்டுகளை பராமரிப்பதில் மெத்தனம் காட்டி வந்த நிலையில் முதல்வர் முகஸ்டாலின் பதவியேற்ற பிறகு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
6 முதல் 12 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசிடமிருந்து வழிகாட்டு நெறிமுறைகள் வந்தபிறகு அடுத்த ஒரு மணி நேரத்தில் தமிழ்நாட்டிலுள்ள சிறார்களுக்கு தடுப்பூசி போடப்படும். இதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். இதற்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்துவது குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று அவர் தெரிவித்தார்.