பெண்கள் முன்னேற்றத்தில் இந்தியாவிற்கு முன்மாதிரியாகத் திகழ்வது தமிழகம்தான் என்று தமிழக ஆளுநர் புகழாரம் சூட்டியுள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தின் 29 வது பட்டமளிப்பு விழா நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட கவர்னர் ஆர் என் ரவி மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, திருப்பதி பத்மாவதி பல்கலைக் கழகத் துணைவேந்தர் ஜமுனா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் அவர்கள் பேசியதாவது: “இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் பெண் வளர்ச்சிக்கு பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது தமிழ்நாட்டை சேர்ந்த பெண்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
சமூக நீதியின் அடிப்படையில் பல திட்டங்கள் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டாலும் ஆண்களைவிட அதிகமாக பெண்கள் கல்வி கற்று வருகின்றனர். பட்டம் படித்த பல பெண்கள் மீண்டும் வீட்டிற்குள் முடங்கி குடும்ப தலைவிகள் ஆகிவிடுகிறார்கள். குடும்பத்தலைவி என்பதும் பெரிய பொறுப்பு தான், இருந்தாலும் அவர்களுடைய பொருளாதார பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.