நேற்று திமுக கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், நவீன தமிழகத்தை’ உருவாக்கியது தி.மு.க. ஆட்சி! தலைவர் கலைஞர் தலைமையிலிருந்த ஆட்சி. இந்த அடிப்படைக் கட்டமைப்பை முழுமையாகச் சிதைத்த ஆட்சிதான், அ.தி.மு.க. ஆட்சி. தி.மு.க. உருவாக்கி வைத்த அடிப்படைக் கட்டமைப்பைச் சிதைப்பதும், தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை உருக்குலைப்பதுமே அ.தி.மு.க. ஆட்சியின் பழக்கமாவும் வழக்கமாவும் இருந்தது.
ஊழலுக்கு அரசியல் வரலாற்றில் உதாரணமான ஆட்சியாக, அ.தி.மு.க. ஆட்சி அமைந்தது. இந்திய வரலாற்றில் மாபெரும் தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் முதலமைச்சர் பதவியில் இருக்கும் போதே, ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு பதவி விலகிய முதலமைச்சர் என்ற பெயரைப் பெற்றவர், அ.தி.மு.க. முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா!
அவரது மறைவு – அதில் மர்மம். அதற்குப் பின்னால், அவருடைய தோழி சசிகலா சிறைக்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதால், அவரது கால் நோக்கி ஊர்ந்து போய் முதலமைச்சர் பதவியைப் பெற்றார் பழனிசாமி. அதற்கு பின் பா.ஜ.க.வின் அடிமையாகி, சசிகலாவையும் ஏமாற்றி பழனிசாமியின் ஆட்சிக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதலமைச்சர் பதவி தந்து, பெயருக்கு வைத்துக் கொண்டார் பழனிசாமி. இப்படி கடந்த பத்தாண்டு காலத்தில் தமிழகத்தை முழுமையாக நாசம் ஆக்கிவிட்டார்கள். மொத்தமாக உருக்குலைத்துவிட்டார்கள் என தெரிவித்தார்.
மேலும் பேசிய ஸ்டாலின், நீங்கள் தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கான அடித்தளத்தை இந்த திருச்சியில் அமைத்திருக்கிறீர்கள். சமூக சீர்திருத்தம், பொருளாதார சமதர்மம், மாநில உரிமை போன்ற முற்போக்கான அம்சங்களை அடிப்படையாகக் கொண்டே தி.மு.கழக கொள்கைகள் அமைந்துள்ளன. பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவுக்குப் பின்னால், 1971-ஆம் ஆண்டு, நம்மை வழிநடத்தும் கொள்கை என்ன என்பதை, நமக்கு அண்ணாவாய் மாறி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஐம்பெரும் முழக்கங்களாக வடித்துக் கொடுத்தார்!
* அண்ணா வழியில் அயராது உழைப்போம்!
* ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்!
* இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!
* வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்!
* மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி!
– ஆகியவை தான் அந்த ஐம்பெரும் முழக்கங்கள்.
அந்த முழக்கங்களை முதன்முதலாக வடித்துத் தந்த ஊரும், இந்த திருச்சி மாவட்டம் தான்!
இந்த வரலாற்றுப் பெருமையும், மலைக்கோட்டை போன்ற கம்பீரமும் கொண்ட மாநகரத்தில் என்னுடைய தொலைநோக்குத் திட்டத்தை வெளியிடுவதில் பெருமைப்படுறேன்!“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்” என்ற ஈராயிரம் ஆண்டு பெருமை கொண்ட நிலம், நம்முடைய தமிழ் நிலம்! உலகத்துக்கு நாகரிகத்தை கற்றுத் தந்த இனம், இந்தத் தமிழ் இனம்! சில மொழிகளுக்கு சொற்கள் உருவாவதற்கு முன்னால், இலக்கணமும் இலக்கியமும் தோன்றிய மொழி, நம்முடைய மொழி! தொல்காப்பியம் முதல் பக்தி இலக்கியங்கள் வரையிலான காலக்கட்டத்தில் கலைகளால், பண்பாட்டால் செழிப்புற்ற சமூகம், நம்முடைய சமூகம்!
இடையில் ஏற்பட்ட பண்பாட்டு படையெடுப்புகளால், அந்நியப் படையெடுப்புகளால் தமிழினம் தன்னுடைய பண்டைப் பெருமையை இழந்து சிதைந்த காலத்தில், காலத்தின் கொடையாய் வாய்த்தது தான், திராவிட இயக்கம் என்ற அரசியல் – பண்பாட்டு இயக்கம்! 1920-ஆம் ஆண்டு தமிழகத்தில் அமைந்த நீதிக்கட்சி ஆட்சிதான், சமூகநீதித் தத்துவமான இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு, சட்டபூர்வமான அங்கீகாரத்தைக் கொடுத்தது. இந்த நூறாண்டு காலத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் அடைந்த அத்தனை வளர்ச்சிக்கும் அதுவே அடித்தளமாக அமைந்தது என தெரிவித்தார்.