தமிழ் கவிஞராக விளங்கும் சுப்ரமணிய பாரதியார் அவர்கள் இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல்தெறிக்கும் விடுதலைப் போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டினார். இவர் ஒரு கவிஞர் மட்டுமின்றி எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் வாயிலாக சிந்தனைகளை மக்களிடம் தட்டி எழுப்பியவர் ஆவார். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அதிகளவு பற்றுக் கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்” என போற்றி பாடியுள்ளார். விடுதலைப் போராட்டகாலத்தில் இவரது தேசிய உணர்வுள்ள பல கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் “தேசிய கவியாக” போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.
பிறந்த தேதி: டிசம்பர் 11, 1882
பிறந்த இடம்: எட்டயபுரம், தமிழ்நாடு (இந்தியா)
பணி: கவிஞர், எழுத்தாளர், விடுதலைவீரர்
இறந்த தேதி: செப்டம்பர் 11, 1921
நாட்டுரிமை: இந்தியா
சின்னசாமி ஐயர்-இலட்சுமி அம்மாள் தம்பதியினரின் மகனாக 1882 ஆம் வருடம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் சுப்ரமணியபாரதியார் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன் ஆகும். இவரது 5 வயதில் தாயார் காலமானார். இவர் இளம்வயதிலேயே தமிழில் புலமைப்பெற்றுத் திகழ்ந்தார். சிறுவயதிலேயே பாரதியாருக்கு தமிழ்மொழி மீது சிறந்த பற்றும், புலமையும் இருந்தது. பாரதியார் 7 வயதில் பள்ளியில் படித்து வரும்போது கவிதைகள் எழுதத் தொடங்கினார். இதையடுத்து பாரதியார் தனது பதினொரு வயதில் கவிபாடும் ஆற்றலை வெளிப்படுத்தினார். இவருடைய கவிப் புலமையை பாராட்டிய எட்டயபுர மன்னர் இவருக்கு “பாரதி” என்ற பட்டத்தை வழங்கினார். அப்போது இருந்து இவர் சுப்பிரமணியபாரதியார் என அழைக்கப்படடார். இதற்கிடையில் பாரதியார் பள்ளியில் படித்துகொண்டிருக்கும் போதே 1897 ஆம் வருடம் செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.
தன் தந்தையின் இறப்புக்குப் பின் பாரதியார் வறுமை நிலையினை அடைந்தார். சிறிதுகாலம் காசிக்கு சென்று தங்கி இருந்தார். அதன்பின் எட்டையபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணிபுரிந்தார். மேலும் மீசைகவிஞன், முண்டாசு கவிஞன் எனவும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் பாரதியார், தாய் மொழியாம் தமிழ்மொழியின் மீது மிகுந்த பற்றுடையவராக விளங்கினார். இவர் சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய பிற மொழிகளிலும் தனி புலமைப்பெற்று திகழ்ந்தார். கடந்த 1912 ஆம் வருடம் கீதையை தமிழில் மொழிப் பெயர்த்தார். கண்ணன்பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திச்சூடி ஆகிய புகழ்பெற்ற காவியங்கள் பாரதியாரால் எழுதப்பெற்றது. அதனை தொடர்ந்து சுதந்திரப்போரில் பாரதியின் பாடல்கள் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத்தீயாய், சுதந்திரக் கனலாய் தமிழகத்தை வீருகொள்ளச் செய்தது.
பாரதியார் “இந்திய பத்திரிக்கையின்” வாயிலாக மக்கள் மத்தியில் விடுதலை உணர்வை தூண்டும் அடிப்படையில் பல்வேறு எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினார். பாரதியின் எழுச்சிக்கு தமிழகத்தில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி இந்தியா பத்திரிக்கைக்கு தடை விதித்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. மேலும் விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்ததால் பாரதி “தேசிய கவியாக” போற்றப்பட்டார். இவர் சுதேசிமித்திரனில் உதவிஆசிரியராக நவம்பர் 1904 -ஆகஸ்ட் 1906 வரை பணிபுரிந்தார். “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்” என சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தன் பாட்டின் மூலம் வெளிபடுத்தியவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்கள். சென்ற 1921-ம் வருடம் ஜூலைமாதம் திருவல்லிகேணியிலுள்ள பார்த்த சாரதி கோவிலுக்கு சுப்ரமணியபாரதியார் சென்ற போது, எதிர்பாராத விதமாக அக்கோவில் யானையால் தூக்கிஎறியப்பட்டதால் பலத்த காயமுற்று மிகவும் நோய்வாய்ப்பட்டார். அதன்பின் 1921 செப்டம்பர் 11 ஆம் தேதி தன் 39வது வயதில் இவ்வுலக வாழ்வில் இருந்து விடுதலைப் பெற்றார்.