Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ் சமூகத்தால் கொண்டாடப்பட வேண்டிய நடிகர் சூர்யா… புகழ்ந்த தள்ளும் இந்திய கம்யூனிஸ்ட்..!!!!

தமிழ் சமூகத்தால் கொண்டாடப்பட வேண்டிய நடிகர் என்றால் அது சூர்யாதான் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது. ஜெய்பீம் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவுக்கு எதிராக பல அச்சுறுத்தல்கள் வந்தவண்ணம் உள்ளன. அவருக்கு என்றும் துணை நிற்கும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளதாவது: “பணம் சம்பாதிப்பதற்காக தான் படம் எடுக்கிறோம். அதற்கு தேவையான காட்சிகளை வைக்கின்றோம். சமூகத்திற்கு கருத்துக்களை கொண்டு சேர்ப்பது எங்கள் வேலை அல்ல என்று பகிரங்கமாகவே திரைப்படத் தயாரிப்பாளர்களும், நடிகர்களும் கூறுகின்றனர்.

இதில் விதிவிலக்காக இருக்கும் ஒரே நடிகர் என்றால் அது சூர்யாதான். அதிகாரவர்க்கத்தின் கொடூரத்தை எதிர்த்து போராடும் ஒரு பழங்குடியின பெண்ணின் கதை ஆவணப்படம் போல் இல்லாமல் அலுப்புத்தட்டாத திரைக்காவியமாக ஜெய் பீம் படம் வெளிவந்துள்ளது. அதை பாராட்டி பலரும் பேசி வரும் நிலையில், இதனை ஏற்க மில்லாத சிலர் மட்டும் பல காரணங்களை கூறி சூர்யாவையும் அவரது குடும்பத்தையும் தாக்குகின்றனர். நடிகர் சூர்யாவை உதைத்தால் ஒரு லட்சம் தருவதாக ஒரு அரசியல் கட்சியின் மாவட்ட தலைவர் கூறியுள்ளார். படத்தில் வரும் காட்சியின் பின்புறம் ஒரு சமுதாயத்தை குறிப்பதாக கூறப்பட்ட போது, அறியாமல் நடந்ததாகப் பதிலளித்ததோடு மிகுந்த பொறுப்புணர்வோடு காட்சியையும் சூர்யா மாற்றினார்.

அதனை குற்ற ஆதாரம் போல பயன்படுத்தி இழப்பீடு கோரி வழக்கு தொடர்வதை பழக்கமாக  வைத்துள்ளனர். சூர்யா விளிம்புநிலை மக்களின் அவலநிலையை படமாக காட்டி அந்த மக்களின் பாதுகாப்புக்கு தமிழக முதல்வரிடம் ஒரு கோடி ரூபாயையும் நிதியாக வழங்கியுள்ளார். பாதிக்கப்பட்ட நரிக்குறவ இன பெண்ணுக்கு 10 லட்சம் நிதி தந்துள்ளார். இவை அனைத்தும் சூர்யா பாராட்டப்படுவது மட்டுமல்லாமல், தமிழ் சமூகத்தால் கொண்டாடப்பட வேண்டிய படைப்பாளியாக திகழ்கிறார். அவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அனைத்து அச்சுறுத்தல்களையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. அவரது படங்களும், செயல்முறைகளும் தமிழ் மக்கள் மட்டுமின்றி இந்தியாவில் மட்டுமல்லாமல் நாடு கடந்து கூட மதிக்கப்படுவார் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அதில் தெரிவித்திருந்தார்.

Categories

Tech |