தமிழக அரசியல் வரலாற்றில் நீண்ட நெடுங்காலமாக திராவிட அரசியல் கோலோச்சி வருகிறது. திமுக – அதிமுக என இரு துருவங்களாக திராவிட அரசியலே தமிழகத்தில் ஆளும் கட்சி, எதிர்க் கட்சியாக இருந்து வரும் நிலையில் நாம் தமிழர் என்ற கட்சியை ஒருங்கிணைதத்து சீமான் அதனை தமிழகம் முழுவதும் எடுத்துச் சென்றார். பட்டிதொட்டி எங்கும் நாம் தமிழர்களின் கொடியை சீமான் வழி நின்ற தம்பிகள் பறக்க விட்டனர்.
திராவிடத்திற்கு மாற்று தமிழ் தேசியம் என்ற வலுவான விவாதங்கள் சமூக ஊடகங்களில் நாம் தமிழர் கட்சியின் தம்பிகளால் முன்னிறுத்தப்பட்டது. இந்த நிலையில்தான் கடந்த ஆண்டு நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகிகளான ராஜீவ் காந்தி, கல்யாணசுந்தரம் மீது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அடுக்கடுக்காக குற்றச்சாட்டை முன்வைத்தார். இது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இவர்கள் இருவரும் கட்சியை உடைக்க பார்க்கிறார்கள். கட்சியில் நான் தான் எல்லாம் என்று சொல்கிறார்கள் என்றெல்லாம் சீமான் தெரிவித்த குற்றசாட்டு பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து இருவரும் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி சில மாதங்களாகவே அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்காமல் இருந்தனர்.
இதில் பேராசிரியர் கல்யாணசுந்தரம் அதிமுகவில் இணைத்துக் கொண்டார். ஆனால் தொடர்ந்து எந்த அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருந்த ராஜீவ் காந்தி தற்போது திமுக தலைவர் மு க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய இருப்பதாக தகவல் உறுதியாகியுள்ளது. திராவிடத்திற்கு மாற்று தமிழ் தேசியம் என்று பயணித்த நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகிகள் திராவிட இயக்கங்கத்தில் மீண்டும் இணைந்துள்ளது திராவிட இயக்கத்தை அவ்வளவு எளிதாக வீழ்த்தமுடியாது என்பதை உணர்த்துவதாக அதன் நிர்வாகிகள் கூறுகின்றனர்.