தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு நாகையில் அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நாகை பகுதியில் உள்ள கோவில்களில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நாகை நீலாயதாட்சியம்மன், காயாரோகண சாமி ஆகிய கோவில்களில் சுந்தரவிடங்க தியாகராஜருக்கு திரவியம், சூரியபகவான், பச்சரிசி, மஞ்சள், பால், தேன், பஞ்சாமிர்தம் ஆகிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அம்மன், சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதன்பின் பஞ்சாங்கம் படிக்கப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டனர். அதேபோல் நெல்லுக்கடை மாரியம்மன் கோவில், நாகை குமரன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.