கண்டமங்கலம் அருகில் கணவன் மனைவியை தாக்கிவிட்டு மர்ம நபர்கள் 10 பவுன் நகையை திருடி சென்று விட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகில் பூஞ்சோலை குப்பம் கிராமம் ஸ்ரீராம் நகர் நகரில் வசித்து வருபவர் ராஜாராம்(53). இவருடைய மனைவி கலையரசி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ராஜாராம் புதுச்சேரியில் உள்ள பெரிய மார்க்கெட்டில் வாழைத்தார் வியாபாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜாராம் தனது வீட்டில் மனைவி குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருக்கும்போது அதிகாலையில் யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது.
உடனே எழுந்து வந்த ராஜாராம் கதவை திறந்த போது வெளியில் முகமூடி அணிந்து 4 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜாராம் சுதாரிப்பதற்குள் பயங்கர ஆயுதங்களுடன் வீட்டிற்குள் புகுந்தார்கள். அதன்பின் அவரின் மகன் கழுத்தில் கத்தியை காட்டி மிரட்டி நகைகளை கலையரசிடம் கேட்டார்கள். ஆனால் அவர் தர மறுத்து சத்தம் போட்டார்.
இதனால் கோபம் அடைந்த கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி கணவன் மனைவியை தாக்கி பீரோவில் இருந்த ரூ 40 ஆயிரம் ரொக்கம் மற்றும் 10 பவுன் நகையை திருடி விட்டு தப்பித்து சென்று விட்டார்கள். இதுகுறித்து அவர்கள் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இப்புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார்கள்.
மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த வீட்டில் ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி இவர்கள் அனைவரும் குடும்பத்துடன் கொல்லிமலை கோவிலுக்கு சென்ற போது வீட்டின் கதவை உடைத்து ரூ 1 லட்சம் ரூபாய் பணத்தையும், 2 பவுன் நகையையும் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றார்கள். இந்த சம்பவம் நடந்த ஒரே மாதத்தில் மீண்டும் அதேவீட்டில் திருடு போனதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.