மேச்சேரியில் தம்பியே அண்ணனைக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரி அருகே வெள்ளாளர் பகுதியைச் சேர்ந்த குமார்-பசுவதி தம்பதியருக்கு ஆஞ்சி குமார், குமரேசன், செல்வகுமார் என மூன்று மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் ஆஞ்சி குமார் மற்றும் குமரேசன் இருவரும் கட்டட தொழிலாளர்களாக இருந்து வருகின்ற நிலையில் இருவருக்கும் மது குடிக்கும் பழக்கம் இருக்கின்றது.
இந்நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன்பு குமரேசன் தனது தாயார் உண்டியலில் சேமித்து வைத்த பணத்தை எடுத்து செலவு செய்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் அண்ணன் தம்பி இருவரும் மது அருந்திவிட்டு தாயாரின் பணம் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது குமரேசனிடம் அம்மாவின் பணத்தை எடுத்து செலவு செய்தது குறித்து கேட்டபோது அவர் மறைத்த நிலையில் வாக்குவாதத்தில் தொடங்கி பின்னர் கைகலப்பாகியது.
சண்டை பெருசாக, குமரேசன் அங்கிருந்த கோடாரியால் ஆஞ்சிகுமாரின் கழுத்தில் வெட்டியதோடு கோடாரியின் பின்பகுதியில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஆஞ்சி குமாரை மீட்ட அக்கம்பக்கத்தினர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விரைந்து வந்த போலீசார் இச்சம்பவம் குறித்து கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆஞ்சி குமார் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டு தம்பி குமரேசனை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அங்கு உள்ள மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.