11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வடசேரி கிராமத்தில் மோகன்-சுந்தரி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 11-ஆம் வகுப்பு படிக்கும் கீர்த்தனா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருந்துள்ளனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மோகன் இறந்துவிட்டதால் கூலி வேலை பார்த்து சுந்தரி தனது குழந்தைகளை பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்கு சென்று மதிய சாப்பாட்டு நேரத்தில் வீட்டிற்கு சென்ற கீர்த்தனா உரிய நேரத்தில் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஆசிரியர்கள் அவரது தம்பியை வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். அப்போது வீட்டிற்கு சென்று பார்த்த சிறுவன் தனது அக்கா கீர்த்தனா தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார்.
இதுகுறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மாணவியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து கீர்த்தனாவின் சித்தப்பா சண்முகம் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் ஆசிரியர் ஒருவர் திட்டியதால் மன உளைச்சலில் கீர்த்தனா தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆசிரியர் திட்டியதால் கீர்த்தனா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.