திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரத்தில் வசித்து வந்தவர் சுப்ரியா (35). இவருக்கு வெங்கட் ராஜேஷ் என்ற தம்பி இருக்கிறார். என்ஜினீயரான இவருக்கு பிரான்ஸ் நாட்டில் மென் பொறியாளராக வேலை கிடைத்தது. இதனையடுத்து வேலையில் சேர பிரான்ஸ் செல்வதற்காக சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த வெங்கட்ராஜேஷை வழியனுப்புவதற்காக சகோதரி சுப்ரியா மற்றும் அவரது கணவர் கிரண்குமார் போன்றோர் உடன் வந்தனர். அதன்பின் விமானம் நிலைய வளாகத்திற்குள் சகோதரி சுப்ரியாவிடம் பேசிக் கொண்டிருந்த வெங்கட்ராஜேஷ் அவர்களிடமிருந்து விடைபெற்று விமான நிலையத்தின் உள்ளே செல்ல துவங்கினாா்.
இந்நிலையில் சகோதரனின் பிரிவு தாங்க முடியாமல் சுப்ரியா திடீரென்று மயங்கி விழுந்தாா். உடனடியாக அங்கிருந்த சகபயணிகள் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனா். அதன்பின் ஊழியா்கள் விரைந்து வந்து விமான நிலையத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சுப்ரியாவை அழைத்து சென்று பரிசோதித்ததில் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இவ்வாறு சகோதரி உயிரிழந்த சோகத்தை தாங்க முடியாமல் வெங்கட் ராஜேஷ் கதறி அழுதார். அத்துடன் தன்னுடைய வெளிநாட்டு பயணத்தையும் அவர் ரத்து செய்துவிட்டார். இது தொடர்பாக தகவலறிந்த விமான நிலைய காவகத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுப்ரியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.