விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது பயணி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து விமானம் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் விமான நிலையத்தை நெருங்கிய போது நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த பஷீர் என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் விமான பணிப்பெண்கள் உடனடியாக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மருத்துவ குழுவை தயார் நிலையில் இருக்கும்படி தெரிவித்துள்ளனர். இதனால் விமானம் தரை இறங்கிய உடனே மருத்துவ குழுவினர் பஷீரை பரிசோதித்து பார்த்துள்ளனர்.
அப்போது விமானம் நடுவானில் பறந்து வந்தபோதே பஷீர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த சென்னை விமான நிலைய காவல்துறையினர் பஷீரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.