Categories
மாநில செய்திகள்

தரமற்ற குளிர்பான விற்பனை…. “இந்த எண்ணிற்கு புகார் கொடுங்க”…. உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை….!!!

தரமற்ற உணவு பொருட்கள் மற்றும் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்வது குறித்து புகார் அளிக்க உணவு பாதுகாப்பு துறை வாட்ஸ்அப் எண்ணை அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “பொதுமக்கள் கோடை காலங்களில் அதிக அளவில் பயன்படுத்தும் குளிர்பானங்களின் தரம் குறித்தும், காலாவதியான குளிர்பானங்களை அதிக அளவில் கடைகளில் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்புத்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. மேலும் தரமற்ற காலாவதியான குளிர்பானங்களை உட்கொள்வதால் வயிற்றுவலி, வயிற்றுப்புண், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது.

அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறையின் மூலமாக குளிர்பானங்களின் தரம் மற்றும் காலாவதி குளிர்பானங்கள் விற்பனை செய்வது தொடர்பாக கடந்த பிப்ரவரி 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விற்பனை இடங்களில் திடீர் என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது 5777 கடைகளில், 634 கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்ட 484 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அனைத்து கடைகளிலும் குளிர்பான பாட்டில்களில் காலாவதி நாள் உள்ளிட்ட விவரங்கள், காலாவதியான குளிர்பானம் அதன் நிறத்திலிருந்து மாறுபட்டு தெரியும் போது அது என்ன நிறத்தில் இருக்கும் என்பது தொடர்பாக அனைத்து விவரங்களையும் அதில் அச்சிட வேண்டும் என்று குளிர்பான நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் தரமற்ற காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் உணவுப் பொருட்களில் உள்ள குறைபாடுகள் குறித்து 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |