தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கி தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி ஜூன் மூன்றாம் தேதி வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் அனைவரையும் கவர்ந்து விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் விக்ரம் திரைப்படம் வெற்றியடைவதற்கு காரணமாக இருந்த படக்குழுவினர் மற்றும் ரசிகர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தரமான தமிழ் படத்தையும் திறமையான நடிகர்களை தாங்கிப்பிடிக்க தமிழ் ரசிகர்கள் தவறியதே இல்லை. அந்த வெற்றி வரிசையில் என்னையும் எங்கள் விக்ரம் திரைப்படத்தையும் நீங்கள் தேர்ந்தெடுத்தது எங்கள் பாக்கியம்.
அதனைத்தொடர்ந்து இசை அமைப்பாளர் அனிருத், சண்டை பயிற்சியாளர் அன்பறிவு எனத் தொடங்கி பெயர் தெரியாமல் பின்னணியில் வேலையை செய்து அனைவருக்கும் உங்கள் பாராட்டுகள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டியது தான் நியாயம். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்ளிட்ட சிறந்த நடிகர்கள் இருந்ததும் இதன் வெற்றிக்கு முக்கிய காரணமாகும். அதுமட்டுமில்லாமல் கடைசி 3 நிமிடம் வந்து திரையரங்குகளை அதிர வைத்த என் தம்பி சூரியா, அன்பிற்காக மட்டுமே அதை செய்தார். அவருக்கு நன்றி சொல்லும் படலத்தை அடுத்து நாங்கள் இணையும் படத்தில் முழுவதுமாக காட்டி விடலாம் என்று இருக்கிறோம். மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சினிமா மீது என் மீது உள்ள அன்பு படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளிலும் தெரிந்தது. ரசிகர்களின் அன்பும் அவ்வாறாகவே இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.