தமிழக விவசாயிகளுக்கு, தரமான விதை நெல்களை வழங்க வேண்டும்’ என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி., வலியுறுத்தி உள்ளார். அவரது அறிக்கையில், பத்து ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில், விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இதன் காரணமாக, தமிழக அரசு வேளாண் துறையில் அகில இந்திய அளவில் பல்வேறு விருதுகளை பெற்றது.காவிரி டெல்டா பகுதிகளில் 30 ஆண்டுகளாக இல்லாத வகையில், 32.41 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அ.தி.மு.க., அரசின் சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
தற்போது, தி.மு.க., அரசின் அலட்சியத்தாலும், அஜாக்கிரதையாலும், குறித்த காலத்தில் தரமான விதை நெல்மணிகள் அனைவருக்கும் வழங்கப்படவில்லை. இதனால், நடவுப்பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், பெரிதும் வேதனை அடைந்துள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே வரகூரைச் சேர்ந்த விவசாயி வீரமணி, தன் 9 ஏக்கர் நிலத்தில், 7 ஏக்கரில் தனியாரிடம் இருந்து ஏ.டி.36 ரக நெல் விதையை வாங்கி, நாற்று தயார் செய்து உள்ளார். மீதமுள்ள 2 ஏக்கருக்கு, செந்தலை வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருந்து, கோ – 51 ரக விதை நெல்லை வாங்கி, நாற்று தயார் செய்ய விதைத்துள்ளார்.
விதைத்து 12 நாட்களாகியும், தி.மு.க., அரசு வழங்கிய விதை நெல்கள் முளைக்கவில்லை. அதிர்ச்சி அடைந்த விவசாயி வீரமணி, வேளாண் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்து உள்ளார். அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயி வீரமணிக்கு, புதிய நெல் விதையை இலவசமாக வழங்க வேண்டும். வீணாகிய விதை நாற்றுக்கு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இதுபோல் வேறு எங்கேனும் நடந்துள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.எதிர்வரும் காலங்களில், மிகுந்த விழிப்புணர்வோடு, தரமான விதை நெல்களை தமிழக அரசு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.