தமிழகத்தில் ஜவ்வரிசி உரிய தரத்துடன் இல்லாமல் விற்கப்படுவதாக புகார்கள் ஏதும் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. ஈரப்பதத்துடன் கூடிய ஜவ்வரிசி ரசாயன பொருட்கள் கலந்து விற்கப்படுவதால், நுகர்வோர்களுக்கு உடல்நலம் பாதிப்படைகிறது. அதனால் கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழக அரசு ஈரப்பதத்துடன் கூடிய ஜவ்வரிசி விற்பனைக்கு தடை விதித்துள்ளது. இந்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என்று நடராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
அந்த மனுவில் ரசாயனம் கலந்த ஜவ்வரிசி விற்பனைக்கு விதித்துள்ள தடை உத்தரவை முழுமையாக செயல்படுத்தவும், அதிகாரிகள் ஈரப்பதத்துடன் கூடிய மரவள்ளிக் கிழங்கு மாவை செல்வதற்கு அனுமதி மறுக்கப் படுவதாகவும், அதனால் ஈரமான கிழங்கு மாவை கொண்டு செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து ஈரப்பதத்துடன் கூடிய ரசாயனம் கலக்கப்பட்ட ஜவ்வரிசி சந்தைகளில் விற்கப்படுவதை தடை செய்யும் வகையில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடுவதில்லை என்றும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் கடைகளில் விற்பனை செய்யப்படும் ஜவ்வரிசி களில் 3 மாதிரிகளை வரவழைத்து அதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உணவு பாதுகாப்பு துறை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கானது மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த போது 3 மாதிரிகளையும் ஆய்வு செய்து அளிக்கப்பட்ட அறிக்கையில் 2 மாதிரிகள் தரமானதாக இருப்பதாகவும், ஒரே ஒரு மாதிரி மட்டும் சற்று வித்தியாசம் காணப்படுவதாகவும், மேலும் நுகர்வோருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தும் வண்ணம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஜவ்வரிசி உரிய தரத்துடன் விற்கப்படுவதாக புகார்கள் வந்தால் அதை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது சம்பந்தமாக உணவு பாதுகாப்பு துறை ஆணையர் பல சுற்றறிக்கைகள் பிறப்பித்துள்ளதாக தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதி தடையை மீறி ஈரமான ஜவ்வரிசியை விற்பனை செய்தால் அதிகாரிகளுக்கு புகார் அளிக்கலாம் என்று கூறி இந்த வழக்கை முடித்துள்ளார்.