ஊராட்சி மன்ற தலைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள தொட்டிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவியாக செல்வராணி வெங்கடேசன் என்பவர் இருக்கிறார். இவர் திடீரென ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரிடம் விருதாச்சலம் போலீசாரும், ஒன்றிய குழு தலைவர் மலர் முருகனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது செல்வராணி கூறியதாவது, நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவள்.
இதனால் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் என்னை எந்தவித பணிகளையும் செய்ய விடாமல் தடுப்பதோடு, என்னை பற்றி அவதூறு பரப்பி வருகிறார். இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறியுள்ளார். அப்போது காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு போலீசார் கூறியுள்ளனர். பின்னர் செல்வராணி போராட்டத்தை கைவிட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் மனு கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.