தமிழகம் முழுவதும் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கடலூர் தொகுதியில் முன்னாள் தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, “நடைபெறவிருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் போர் நடக்கிறது. திமுக ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசி விட்டு எதையும் நிறைவேற்றவில்லை. குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக கூறிய திமுக அரசு பொறுப்பேற்று 9 மாத காலங்கள் ஆகியும் அதுபற்றி எந்த என் பேச்சும் பேசாமல் அமைதியாக உள்ளது.
சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படும் என கூறியது திமுக. ஆனால் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இஷ்டத்திற்கு பொய்களை அள்ளி வீசி ஸ்டாலின் ஆட்சியை பிடித்துவிட்டார். இதனால் மக்கள் திமுகவின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களிக்கும் பட்சத்தில் சொன்ன வாக்கை அதிமுகவினர் காப்பாற்றுவோம்.!” என அவர் கூறினார்.