சென்னை மாவட்டத்தில் உள்ள மடிப்பாக்கம் பகுதியில் வசிக்கும் மஞ்சுநாதன் என்பவர் குடும்பத்தினருடன் காரில் சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சின்னகங்கணாங்குப்பம் பகுதியில் சென்ற போது மஞ்சுநாதனின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் சைக்கிளில் நின்று கொண்டிருந்த ரமணா என்ற பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் மீது மோதி கவிழ்ந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த ரமணாவை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் மஞ்சுநாதனும், அவரது குடும்பத்தினரும் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்து சரி செய்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.