சோழவரம் அருகே தற்காப்புக்காக மாமாவை கொலை செய்த பெண்ணை போலீசார் விடுதலை செய்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அரசு பல்வேறு சட்டங்களை விதித்த போதிலும் அதற்கு எதுவும் அஞ்சாமல், சிலர் தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு அச்சப்படுகிறார்கள். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந்நிலையில் சோழவரம் அருகே கௌதமி என்ற 19 வயது இளம் பெண்ணை கத்தியை காட்டி அவரின் மாமா அஜித்குமார் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார்.
அப்போது அந்தப் பெண் அதே கத்தியை பிடுங்கி அவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அந்தப் பெண் காவல் நிலையம் சென்று சரணடைந்தார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் அவர் தன்னை பாதுகாத்துக் கொள்ளவே கொலை செய்ததால், அவரை சிறையில் அடைக்காமல் மகளிர் காப்பகத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், “இதனை கொலையாக கருத முடியாது, தனது உயிரைக் காத்துக்கொள்ள தற்காப்புக்கு செய்யப்பட்ட கொலை என்று தான் கருத வேண்டும்” என்று கூறி அந்த பெண்ணை விடுதலை செய்துள்ளார்.