தங்குவதற்கு இடம் கேட்டு மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் கடந்த 2019-ஆம் ஆண்டு பெய்த மழையின் போது ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக வால்பாறை கல்லார்குடியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் பாதிக்கபட்டனர். அதன் பிறகு அவர்களுக்கு தாய்முடி எஸ்டேட் தனியார் தேயிலை தோட்ட குடியிருப்பில் தங்குவதற்கான இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தெப்பக்குள மேட்டில் இடம் வழங்கக்கோரி மலைவாழ் மக்கள் மற்றும் அனைத்து கட்சி சார்பில் வனத்துறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கல்லார்குடி மக்களுக்கு தெப்பக்குள மேட்டில் மாற்று இடம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வனத்துறை அலுவலகம் முன்பு அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் சமூக இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. அனைத்து கட்சி மற்றும் சமூக இயக்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் சேர்ந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர்.
இதனையடுத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக வால்பாறை கல்லார்குடியில் குடிசைகளை அகற்றியதோடு, மாற்று இடம் தருவதாக கூறி தாய்முடி எஸ்டேட் தனியார் தேயிலை தோட்ட குடியிருப்பில் மலைவாழ் மக்களுக்கு இடம் அளித்துள்ளனர். மேலும் அவர்களின் பாரம்பரிய உரிமை படி தெப்பக்குள மேட்டில் உடனடியாக இடம் வழங்க வேண்டுமென்றும், தற்காலிக குடியிருப்பில் அவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர் என்றும் கூறியுள்ளனர். இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தபடும் என அவர்கள் கூறியுள்ளனர்.