12- ஆம் வகுப்பு மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுமி யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனையடுத்து சிறுமிக்கு உணவு கொடுப்பதற்காக வீட்டிற்கு வந்த உறவினர் சிறுமி மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக சிறுமி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ஆசிரியை திட்டியதாலும், சக மாணவிகள் கிண்டல் செய்ததாலும் மன உளைச்சலில் சிறுமி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.