சென்னை அடையாளம்பட்டு அடுக்குமாடி குடியிருப்பில் மகாராஷ்டிரத்தை சேர்ந்த அருண் சாவுன் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் சாவுன் தனது மனைவியுடன் அறையில் உறங்கி கொண்டிருந்தார். மற்றொரு அறையில் 2 மகன்களும் உறங்கினர். இந்நிலையில் இன்று காலை பார்த்தபோது அண்ணனுடன் படுத்திருந்த சிறுவன் ஹாருஸ் என்பவரை காணவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த சாவுன் அக்கம் பக்கத்தில் மகனை தேடி பார்த்தார். எனினும் சிறுவன் ஹாருஸ் கிடைக்கவில்லை. இந்நிலையில் அதே குடியிருப்பில் உள்ள வீட்டின் பால்கனியில் சிறுவன் ஒருவன் தலை சிதறி இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினரின் இறந்து கிடந்த சிறுவன் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது விசாரணையில் இறந்து கிடந்த சிறுவன் அதே குடியிருப்பைச் சேர்ந்த சாவுனின் மகன் ஹாரஸ் என்பது தெரியவந்தது.
அதன்பின் சிறுவனின் வீட்டிற்கு சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அங்கு சிறுவன் ஹாரஸ் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், “இந்த உலகத்தில் எனக்கு வாழ பிடிக்கவில்லை. அதன் காரணமாகவே நான் தற்கொலை செய்து கொள்கிறேன். அப்பா, அம்மா இருவரும் உங்கள் உடல்நிலையை நன்றாக பார்த்து கொள்ளுங்கள். காவல்துறையினர் யாரும் எனது பெற்றோரை தொந்தரவு செய்யக்கூடாது” என்று குறிப்பிட்டிருந்தது.