மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முனிசிபல் காலனியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற அஞ்சலை என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் பாப்பாத்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல் மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் ஓய்வு பெற்று 1 1/3 ஆண்டுகள் கடந்த பிறகும் மாநகராட்சி நிர்வாகத்தினர் அஞ்சலைக்கும், பாப்பாத்திக்கும் ஓய்வூதியம் மற்றும் பண பலன்களை வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் இரண்டு பேரும் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை அட்டையை பிடித்தபடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் தங்களுக்கு உடனடியாக பண பலன்களை வழங்கவில்லை என்றால் எறும்பு பொடியை தின்று தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டல் விடுத்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேருடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன் பிறகு இருவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.