கரூர் மாவட்டத்திலுள்ள கோவிலூரில் கூலி தொழிலாளியான பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேணுகாதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். மத்திய அரசின் இலவச வீடு கேட்டு பலமுறை பாஸ்கர் மனு அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மன உளைச்சலில் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் பாஸ்கர் அப்பகுதியில் இருக்கும் 140 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி கீழே குதித்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் வருவாய்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பாஸ்கருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி அவரை கீழே வரச் செய்தனர். பின்னர் உங்களது கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் எடுத்து கூறப்படும். இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என போலீசார் அவரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.