பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 32 பயணிகள் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நெடிமோழியனூரில் இருந்து நேற்று முன்தினம் அரசு பேருந்து திண்டிவனம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை அய்யனார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். மேலும் ரவி என்பவர் கண்டக்டராக பணியில் இருந்துள்ளார். இந்த பேருந்தில் 50 பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் ஆலகிராமம் வளைவில் திரும்ப முயன்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இடைபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர் அய்யனார், கண்டக்டர் ரவி, பயணிகள் ஜெயக்கொடி, துளசி, மாரிமுத்து உள்பட 32 பேரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பேருந்து என்ஜினியிலிருந்து கரும்புகை வெளியேறியதால் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் என்ஜினில் இருந்து வந்த கரும் புகையை கட்டுப்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.