கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் வாலிபர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள சைதாப்பேட்டையில் அக்குபஞ்சர் டாக்டரான ராகவன்(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது காரில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திருமலை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமநத்தம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது ராகவனின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவில் இருக்கும் மின்விளக்கு கம்பத்தில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ராகவனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கிய காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.