ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பெண்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சோழம்பட்டு கிராமத்தில் வசிக்கும் 8 பெண்கள் விவசாய கூலி வேலை பார்ப்பதற்காக சமத்துவபுரத்திற்கு சென்றுள்ளனர். அங்கு வேலை முடிந்த பிறகு 8 பேரும் சொந்த ஊருக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். இந்த ஆட்டோ நெடுமானுர் பால் கூட்டுறவு சங்கம் அருகே சென்றது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தாறுமாறாக ஓடி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காயமடைந்த சகாயமேரி, ஆரோக்கிய மேரி, எலிசபெத், விஜயா உள்பட 8 பெண்களை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.