கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூரில் ராஜு, மாதையன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் திருப்பூரைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரது நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் பாஸ்கர், ராஜு, மாதையன் ஆகிய 3 பேரும் திருப்பூரிலிருந்து காலில் தாளவாடிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இதனை அடுத்து அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு இவர்கள் மீண்டும் திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில் கும்பராகுண்டி வனப்பகுதி சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.